குஜராத் – ராஜ்கோட் சிறார் விளையாட்டு மையத்தில் தீ விபத்து: குழந்தைகள் உள்பட 20 பேர் பலி !

Spread the love

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சிறார் விளையாட்டு மையத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் உட்பட 20 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் சிறுவர்களுக்கென பிரத்யேகமான டிஆர்பி விளையாட்டு மையம் (TRP game zone) உள்ளது. இங்குள்ள தற்காலிக அமைப்பு ஒன்றில் சனிக்கிழமை மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்தப் பகுதியே புகை மண்டலம் ஆனது. இந்த விபத்து குறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக நிகழ்விடத்துக்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டனர். தற்போது மீட்புப் பணி நடந்து வருகிறது. கோடை விடுமுறையை முன்னிட்டு ஏராளான சிறுவர், சிறுமியர் வந்துள்ளதால், அவர்களில் பலர் இதில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இது குறித்து ராஜ்கோட் நகராட்சி ஆணையர் ஆனந்த் படேல் கூறுகையில், “மீட்புப் பணி முடிந்த பின்னரே முழு விவரம் தெரியவரும்” என்றார். மீட்பு பணிகள் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து தகவல் வெளியாகவில்லை.

இது தொடர்பாக முதல்வர் பூபேந்திர படேல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட தகவலில், “ராஜ்கோட்டில் உள்ள விளையாட்டு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இது தொடர்பான அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

காவல் துறை ஆணையர் ராஜூ பார்கவா கூறுகையில், “தீ அணைக்கப்பட்டுவிட்டது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு வருகிறோம். தற்போது வரை 20 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. சடலங்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்த இடம் யுவராஜ் சிங் என்பவருக்கு சொந்தமானது. கவனக்குறைவு மற்றும் இறப்பு தொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார். உயிரிழந்தவர்களின் பலர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours