விண்வெளியில் இருந்து பூமிக்குத் திரும்பினார் சுல்தான் அல்நேயடி!

Spread the love

சர்வதேச விண்வெளி மையத்தில் 6 மாதங்கள் தங்கியிருந்த ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த, ஆராய்ச்சியாளர் சுல்தான் அல்நேயடி உட்பட ஆறுபேர் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பியுள்ளனர்.

சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்று 6 மாத காலம் தங்கி ஆய்வு செய்யும் திட்டத்திற்கு, ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த சுல்தான் அல்நேயடி கடந்த ஆண்டு ஜுலை மாதம் 25ம் தேதி தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து அவருக்கு பல்வேறு பரிசோதனைகளுடன், விண்வெளியில் தங்குவதற்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டன.

அதனைத்தொடர்ந்து, ஃபால்கன் 9 ராக்கெட்டின் மூலம் கடந்த மார்ச் மாதம் 2ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்கான பயணத்தை சுல்தான் தொடங்கினார். மறுநாள் சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்த அவர், ஏப்ரல் 28ம் தேதி விண்வெளிக்கு சென்று, ஸ்பேஸ் வால்க் செய்த அமீரகத்தை சேர்ந்த முதல் நபர் என்ற சாதனையை படைத்தார்.

விண்வெளியில் 200-க்கும் மேற்பட்ட சோதனைகளை மேற்கொண்ட சுல்தான், 4,400 மணிக்கும் அதிகமான நேரத்தை அங்கு செலவழித்துள்ளார். இதன் மூலம், விண்வெளியில் நீண்ட நாட்கள் இருந்த அரேபியர் என்ற பெருமையையும் சுல்தான் படைத்துள்ளார். விண்வெளியில் இருந்தவாறு, பல்வேறு புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார்.

விண்வெளியில் இருக்கும் நபர்கள் எப்படி தண்ணீர் அருந்துவார்கள், எப்படி உணவு தயாரித்து சாப்பிடுவார்கள் என்பது போன்ற தகவல்களை வெளியிட்டுள்ளார். விண்வெளியில் இருந்து பூமி மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் பல புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

கடந்த 186 நாட்களாக சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்த அவர் உட்பட ஆறுபேர் நேற்று இரவு பாதுகாப்பாக பூமிக்கு திரும்பியுள்ளனர். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலத்தில் நாசா ஆராய்ச்சியாளர்கள் உட்பட 6 பேர், 17 மணி நேரம் பயணித்து ஃபுளோரிடாவில் உள்ள கடற்கரை பகுதியில் தரையிறங்கினர்.

பூமியின் ஈர்ப்பு விசைக்கு ஏற்ப அவர்களது உடல் மீண்டும் செயல்பட சில மணி நேரங்கள் ஆகும் என்பதால், அவர்கள் ஸ்ட்ரக்சரில் வைத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சிகிச்சை முடிந்து 2 வாரங்களுக்குப் பிறகு இயல்பு வாழ்கைக்கு திரும்புவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours