மனைவியின் பிரசவ காலத்தில் கணவருக்கு விடுப்பு ?!

Spread the love

மனைவியின் பிரசவ காலத்தில் கணவருக்கும் விடுப்பு வழங்க தனி சட்டம் உருவாக்குவது அவசியம் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

தென்காசி மாவட்டம் கடையம் காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் என்பவர், தனது மனைவியின் பிரசவம் காரணமாக பணிக்குச் செல்ல இயலாத நிலையில், விளக்கம் கோரி அழைப்பாணை அனுப்பப்பட்டது. இந்நிலையில் இந்த அழைப்பாணையை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சரவணன் மனு தாக்கல் செய்தார்.

அவர் தாக்கல் செய்திருந்த மனுவில், எனது மனைவியின் பிரசவ காலத்தில் நான் உடன் இருப்பதற்காக மே 1 முதல் 90 நாட்கள் விடுமுறை அளிக்குமாறு காவல் துறை உதவியாளர் அதிகாரிகளிடம் கூறி அனுமதி வாங்கினேன். ஆனால், கடையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் திடீரென ஏற்பட்ட சட்டம் ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி எனக்கு வழங்கப்பட்ட விடுமுறையை ரத்து செய்தனர். இதை எதிர்த்து, நான் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில், எனக்கு விடுமுறை அளிக்க பரிசீலிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்பேரில் எனக்கு மே 1 முதல் 30 நாட்கள் வரை விடுமுறை வழங்கப்பட்டது. இந்த நிலையில் மே 31 அன்று எனது மனைவிக்கு குழந்தை பிறந்ததால், அன்றைய தினம் என்னால் பணிக்கு திரும்ப முடியவில்லை. இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் அனுப்பினேன். ஆனால் அதை ஏற்றுக் கொள்ளாமல், காவல்துறை சட்ட விதிகளை பின்பற்றாமல் நான் ஓடி விட்டதாகவும், அதற்கான விளக்கம் அளிக்குமாறு எனக்கு அழைப்பானை அனுப்பியுள்ளனர். எனவே, இந்த விளக்க அழைப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விக்டோரியா கவுரி, இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளாக தந்தையருக்கான விடுப்பு (மனைவியின் மகப்பேறு காலத்தில்) பேசப்பட்டு வருகிறது. ஆனால், இந்தியாவில் மனைவி மகப்பேறு காலத்தில் தந்தையருக்கான விடுப்பு அளிக்கும் சட்டம் இல்லை. இருப்பினும், சென்ட்ரல் சிவில் சர்வீசஸ் விதியில் தந்தையருக்கான விடுப்பு குறித்து கூறப்பட்டுள்ளது. மகப்பேறு காலத்தில் மனைவியுடன் கணவனும் உடன் இருப்பதற்கு தனி சட்டம் உருவாக்குவது அவசியமாக உள்ளதாக கூறி அவரை பணியில் சேர உத்தரவிட்டார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours