கருணை பணி… திருமணமான மகளுக்கும் உரிமை !

Spread the love

கணவரை இழந்த பெண்ணுக்கு தந்தையின் இறப்புக்கு பிந்தைய கருணை அடிப்படையிலான பணியினை வழங்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த கல்பனா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் ’என் தந்தை கருப்பசாமி, கிராம நிர்வாக அலுவலக உதவியாளராக பணியில் இருக்கும் போது கடந்த 2018ம் ஆண்டு இறந்து போனார். இந்நிலையில் வாரிசு அடிப்படையில் எனக்கு பணி வழங்க கோரி விண்ணப்பித்தேன். ஆனால் எனது விண்ணப்பம் 2020 ம் ஆண்டு அரசு தரப்பில் நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்து வாரிசு வேலை வழங்கக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, திருமணமாகி விட்டதால் எனக்கு வாரிசு வேலை வழங்க உத்தரவிட முடியாதென்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார். அதை ரத்து செய்து எனக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க உத்தரவிட வேண்டும்’ என கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரத சக்கரவர்த்தி ஆகியோர் விசாரித்தனர். அப்போது மனுதாரரின் வழக்கறிஞர் ஆஜராகி, 2020ம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட அரசாணை அடிப்படையில், திருமணமான மகள்களுக்கு அரசு வாரிசு பணி வழங்க உரிமை உள்ளது. மேலும் மனுதாரரின் கணவரும் இறந்து விட்டார். எனவே அவருக்கு வாரிசு அடிப்படையிலான பணி வழங்க வேண்டும் என வாதாடினார்.

இதனை தொடர்ந்து நீதிபதிகள், மனுதாரர் தற்போது கணவரை இழந்து தனியாக உள்ளார். மேலும் தனது தந்தை இறப்பிற்கு பிறகு தாயையும் அவர் தான் கவனித்து வருகிறார். இவரின் குடும்பம் முழுவதும் மனுதாரரின் வருமானத்தை நம்பி உள்ளது. எனவே, குடும்ப சூழ்நிலையும், வறுமையும் கருத்தில் கொண்டு மனுதாரருக்கு கருணை அடிப்படையில் 3 மாதத்தில் பணி வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours