இந்துராஷ்டிர இலக்கை அடைவதற்காகவே ‘ஒரேநாடு- ஒரே தேர்தல்’ திட்டம் !

Spread the love

இந்துராஷ்டிர இலக்கை அடைவதற்காக பல்வேறு சட்டரீதியான ஆயத்தப் பணிகளை, பரிசோதனைகளை செய்துவருகிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “2014 இல் நரேந்திர மோடி தலைமையில் பாரதிய ஜனதா கட்சி அரசு பொறுப்பேற்றதிலிருந்து ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே கல்வி முறை, ஒரே வரி, ஒரே குடும்ப அட்டை என்று எல்லாவற்றையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து டெல்லியில் அதிகாரங்களை குவித்து வைத்துக் கொண்டு எதேச்சதிகார ஆட்சி நடத்துகிறது.

இதன் உச்சகட்டமாக ஒரே நாடு; ஒரே தேர்தல் என்று நீண்ட காலமாக பாஜக கூறிவரும் திட்டத்தைச் செயல்படுத்த மோடி அரசு தீவிரமாக முனைந்திருக்கிறது.

இந்திய குடியரசின் முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் தலைமையில் ஒரே நாடு; ஒரே தேர்தல் குறித்து ஆய்வு செய்திட ஒன்றிய பாஜக அரசு குழுவை அறிவித்திருக்கிறது.

குடியரசு தலைவர் பதவியில் இருந்தவரை மரபுகளை மீறி இத்தகைய குழுவுக்கு தலைவராக நியமித்த மோடி அரசின் செயல் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல; கண்டனத்துக்குரியது.

மோடி தலைமையில் ஆட்சியில் அமர்ந்திருக்கும் பாசிச ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க, தனது இந்துராஷ்டிர இலக்கை அடைவதற்காக பல்வேறு சட்டரீதியான ஆயத்தப் பணிகளை, பரிசோதனைகளை செய்துவருகிறது.

குடியுரிமைத் திருத்தச் சட்டம், காஷ்மீர் சிறப்புரிமைச் சட்ட நீக்கம், பசுவதைத் தடுப்புச் சட்டம், லவ் ஜிகாத் தடுப்புச் சட்டம், மதமாற்றத் தடைச்சட்டம், புதிய கல்வி(காவி)க் கொள்கை, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (உஃபா), என்.ஐ.ஏ, சொத்துசேதத் தடுப்புச் சட்டம், ஆதாரை வாக்காளர் அட்டையுடன் இணைப்பது என பல்வேறு சட்டங்களை இதற்கான சான்றாகச் சுட்டிக்காட்டலாம்.

அதன் வரிசையில் தற்போது, ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ சட்டத்தையும் நடைமுறைக்கு கொண்டுவர இருக்கிறது.

2014-இல் இருந்தே பா.ஜ.க. தனது தேர்தல் அறிக்கையில், ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ என்ற திட்டத்தை முன்வைத்து வருகிறது. இதை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்களை 2017-ஆம் ஆண்டு நிதி ஆயோக் வகுத்துக் கொடுத்தது.

2018-ஆம் ஆண்டு சட்ட ஆணையம் இந்த ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ திட்டத்திற்காக அரசியலமைப்பு சட்டத்தில் சில மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது.

இந்நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் 10-ஆம் தேதியன்று, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா “ஒரே நாடு; ஒரே தேர்தல் என்பது நல்ல பரிந்துரை. ஆனால் இதற்கு அரசியலமைப்பில் மாற்றம் கொண்டு வர வேண்டும். அனைத்து தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது” எனக் கூறி, பா.ஜ.க செயல் திட்டத்திற்கு ஒத்துழைக்கத் தயார் என்று பச்சைக் கொடி காட்டினார்.

தலைமை தேர்தல் ஆணையாளர் கூறியவாறு அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து ஒரே நாடு- ஒரே தேர்தல் முறையை செயல்படுத்த தொடக்கமாக, செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் செப்டம்பர் 28 ஆம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.

இந்தச் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ சட்ட முன்வரைவு தாக்கல் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

மக்களாட்சி கோட்பாடுகளின் ஆணிவேர்களை அறுத்து எரிந்து நாடாளுமன்ற ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து, சர்வாதிகார இந்துராஷ்டரத்தைக் கட்டமைக்கத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் -பாஜகவின் திட்டத்தை ஜனநாயக முற்போக்கு சக்திகள் கரம் கோர்த்து முறியடிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours