பிரதமரின் கிரீஸ், தென்னாப்பிரிக்கா பயணங்கள் !

Spread the love

கிரீஸ் தலைநகர் ஏதென்சுக்குச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோதிக்கு, அந்நாட்டின் உயரிய விருதை அதிபர் கேதரினா வழங்கிச் சிறப்பித்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா மற்றும் கிரீஸ் நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோதி, முதலாவதாக ஜோஹன்னஸ்பர்க் நகரில் நடைபெற்ற 15-வது பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார்.

தென்னாப்பிரிக்கப் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் நரேந்திர மோதி தனி விமானத்தில் கிரீஸ் தலைநகர் ஏதென்ஸ் சென்றடைந்தார். விமான நிலையத்தில் அவருக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. கிரேக்க வெளியுறவு அமைச்சர் ஜார்ஜ் கேராபெட்ரிட்டிஸ் பிரதமர் மோதியை வரவேற்று அழைத்துச் சென்றார்.

விமான நிலையத்தில் இருந்து விடுதிக்குச் சென்ற பிரதமருக்கு கிரேக்கவாழ் இந்தியர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பிரதமர் நரேந்திர மோதிக்கு மாலை, கிரீடம் ஆகியன அணிவிக்கப்பட்டன.

ஏதென்சில் உள்ள போர்வீரர் நினைவிடத்தில் பிரதமர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்

கிரேக்கப் படைவீரர்களின் அணிவகுப்பு மரியாதையையும் பிரதமர் மோதி ஏற்றுக்கொண்டார்.

கிரேக்க அதிபர் கேதரினா சேகல்லரோபோலோவைப் பிரதமர் நரேந்திர மோதி சந்தித்தார். அப்போது சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர் நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது குறித்து இருவரும் பேசியதாகக் கூறப்படுகிறது.

கிரேக்க நாட்டின் உயரிய, கிராண்ட் கிராஸ் ஆப் த ஆர்டர் ஆப் ஹானர் என்கிற விருதைப் பிரதமருக்குக் கிரேக்க அதிபர் கேதரினா வழங்கிச் சிறப்பித்தார்.

பிரதமர் நரேந்திர மோதி, கிரேக்க நாட்டின் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாக்கிசைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். அப்போது இருநாட்டு வணிக, பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருநாட்டுப் பிரதிநிதிகளும் பேச்சு நடத்தினர்.

பிரதமர் நரேந்திர மோதிக்கு வழங்கப்பட்ட விருதின் பாராட்டுச் சான்றிதழில், இந்தியாவின் பெருமையை உலகறியச் செய்ய ஓய்வின்றி உழைக்கும், துணிச்சலான சீர்திருத்தங்களைச் செயல்படுத்தி நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் அவர் பாடுபடுவதாகக் குறிப்பிட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பருவநிலை மாற்றத்தைப் பன்னாட்டு விவகாரங்களில் உயர் முன்னுரிமைக்குக் கொண்டுவந்த ராஜதந்திரி என்றும் அதில் குறிப்பிட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours