திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம்..!

Spread the love

ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்திற்கு தயாராகி வருகிறது. செப்டம்பர் 12 ம் தேதி செவ்வாய்கிழமை கோவிலை சுத்தப்படுத்தும் பணி நடைபெற உள்ளதால் நாளை காலை 6 மணி முதல் 12 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செப்டம்பர் மாத உற்சவங்கள் கோலாகலமாக நடந்து வருகிறது. செப்டம்பர் 17 ம் தேதி முதல் பிரம்மோற்சவம் துவங்க உள்ளதால் திருமலை முழுவதும் விழாக் கோலம் பூண்டுள்ளது.


பிரம்மோற்சவத்திற்கான ஏற்பாடுகள் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. பிரம்மோற்சவம் துவங்க உள்ளதை முன்னிட்டு செப்டம்பர் 12 ம் தேதி திருப்பதி வெங்கடேஷ்வர சுவாமி கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு செவ்வாய்கிழமை காலை 6 மணி முதல் 12 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட மாட்டார்கள். பரிமளம் எனப்படும் வாசனை திரவியங்கள் கலந்த நீர் கொண்டு கோவில் முழுவதும் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறும். இதனால் இதை கவனத்தில் கொண்டு பக்தர்கள் தங்களின் தரிசன நேரத்தை திட்டமிட்டுக் கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

திருமலையில் ஏழுமலையானுக்கு நடக்கும் தங்க தாமரை சேவையும் செப்டம்பர் 12 ம் தேதி ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது. பகல் 12 மணிக்கு பிறகே பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட உள்ளனர். கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுவதால் செப்டம்பர் 12 ம் தேதி விஐபி பிரேக் தரிசனமும் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது. இவற்றை கவனத்தில் கொண்டு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஏற்பாடுகளுக்கு பக்தர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

திருமலை ஏழுமலையானுக்கு வரும் 18ஆம் தேதி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இதனையொட்டு 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அங்குரார்ப்பணம் நடைபெறும். 18ஆம் தேதி ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மாநில அரசு சார்பில் பட்டு வஸ்திரம் சமர்பிக்கிறார். தினசரியும் மலையப்பசுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 22ஆம் தேதி வெள்ளிக்கிழமை கருடவாகன சேவை நடைபெறும். அன்றைய தினம் பல லட்சம் பக்தர்கள் திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

26ஆம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவ விழா நிறைவடையும். பிரம்மோற்சவம் 18ஆம் தேதி தொடங்க உள்ளதால் இனி வரும் நாட்களில் திருமலையில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பிரம்மோற்சவத்தின் போது நடக்கும் தங்க கருட சேவையை காண ஏராளமான பக்தர்கள் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பக்தர்கள் விரைந்து சுவாமி தரிசனம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours