முதலமைச்சருக்கு எதிராக கருப்பு கொடி… சத்தியாகிரக போராட்டம் ஒத்திவைப்பு….

Spread the love

தமிழ்நாடு அனைத்து விவசாயி சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் சென்னை பெசன்ட் நகரில் கடந்த ஆகஸ்ட் 15 முதல் தமிழ்நாடு அரசு நில ஒருங்கிணைப்பு சட்ட -2023 திரும்ப பெற வலியுறுத்துவது உட்பட 25 கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இன்று நடைபெற்ற போராட்டத்தில் 25 பெண்கள் உட்பட 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். காலையில் தொடங்கிய போராட்டம் மாலை 3 மணிக்கு வரை நீடித்தது. பின்னர் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவதற்காக பி ஆர் பாண்டியன் தலைமையில் புறப்பட்டனர். வழியிலேயே 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு தடுத்து நிறுத்தினர். விவசாயி ஒருவர் கீழே படுத்து பிணமாக கிடப்பது போன்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிஆர்.பாண்டியன்,
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான அரசு விவசாயிகளுக்கு விரோதமாக செயல்படுகிறது. கலைஞர் ஆட்சி என்கிற பெயரில் கலைஞர் பெயரில் கொண்டு வந்த கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தை இந்த ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யாமல் கைவிட்டுள்ளது. விவசாயிகளை சந்திக்காமல் புறக்கணிப்பதும், விவசாயிகள் பிரச்சனையை புறந்தள்ளுவதும், விவசாயிகளுக்கு எதிராக சட்டம் போட்டு ஒடுக்க நினைப்பதும், திமுக ஆட்சியில் தொடர்வது அனுமதிக்க மாட்டோம்.

முதலமைச்சர் வெளி உலகமே தெரியாமல் விவசாயிகளுக்கு எதிராக செயல்படுகிறார். அமைச்சர்களை கூட சந்தித்து துறைகள் குறித்து நேரடியாக கருத்து கேட்பதை கைவிட்டு விட்டார். கட்சி தலைவர்கள் தொண்டர்கள் வரையிலும் அவர் சந்திப்பதை முழுமையாக கைவிட்டுள்ளார். இதன் மூலம் தமிழக மக்களிடத்தில் இருந்து அவர் துண்டிக்கப்பட்டுள்ளார்.

விவசாயிகளுக்கு நெல்லுக்கு ரூ 2500ம் கரும்புக்கு ரூ4000ம் வழங்குவேன் என்று தேர்தல் அறிக்கையில் கூறிவிட்டு மூன்றாண்டு காலமாக ஏமாற்றி விட்டார்.கலைஞர் சொல்வதை உடனே செய்வார்.

விவசாயிகளை ஒடுக்குவதற்கும் | விளைநிலங்கள் அபகரிப்பதற்கும் கார்ப்பரேட்டுகளோடு கைகோர்த்து கூட்டணி கட்சிகளுக்கு தெரியாமல் விவசாயிகள் கருத்தறியாமல் நில ஒருங்கிணைப்பு சட்டம்-2023 கொண்டு வந்துள்ளார்.இச்சட்டம் குறித்து உண்மைநிலையை இதுவரையிலும் தெளிவுபடுத்தவில்லை. நீர் நிலைகளையும் ஆறுகள் உள்ளிட்ட அனைத்தையும் அபகரிக்க கூடிய கொடிய சட்டமான இச்சட்டம் பிரதமர் மோடி கொண்டு வந்த வேளாண் விரோத சட்டத்தை விட பல மடங்கு மோசமான சட்டமாகும்.

எடப்பாடி ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட குறுவைக்கான காப்பீடு திட்டம் முற்றிலும் கைவிடப்பட்டுள்ளது. குறுவை பாதிப்பு ஏற்படுகிற விவசாயிகள் இழப்பீடு பெற முடியாமல் கண்ணீர் விட்டு கதறுகிறார்கள்.

பாஜக எதிர்ப்பு அரசியல் என்கிற பேரில் விவசாயிகளை ஒழிக்க நினைப்பது ஏற்கத்தக்கதல்ல. மதவாதம் என்கிற பெயரில் மக்களை ஒடுக்கி விட்டு ஆட்சி நடத்த முற்படுவதை எதிர்த்து ஆட்சியை விட்டு இறக்குவதற்கு விவசாயிகள் கவலைப்பட மாட்டார்கள்.

நான்கு தினங்கள் சந்தியா கிரக போராட்டத்தை நடத்தி இருக்கிறோம். அதிகாரிகள் அனுப்பி கோரிக்கை குறித்து கூட கேட்பதற்கு மனம் இல்லாமல் விவசாயிகள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள்.சத்தியாகிரகப் போராட்டம் இன்றோடு ஒத்திவைக்கப்படுகிறது.எதிர்காலத்தில் விவசாயிகளுக்கு விரோதமான சட்டங்களையும் திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தினால் அவர் செல்லுகிற கிராமங்கள் தோறும் கருப்பு கொடி ஏற்றி அவருக்கு எதிர்ப்பை பதிவு செய்ய தயங்க மாட்டோம்.

தேர்தல் களத்தில் அவருக்கு எதிராக விவசாயிகளை ஒன்றுப்படுத்தி ஆட்சிக்கட்டிலிருந்து இறக்குவதற்கு அஞ்ச மாட்டோம் என எச்சரிக்கிறேன் என்று பி ஆர்.பாண்டியன் அப்போது குறிப்பிட்டார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours