நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையுடன் தமிழக அரசின் ஊக்கத்தொகை !

Spread the love

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் காரீப் பருவம் 2002-2003 முதல் மத்திய அரசின் முகவராக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் செயல்பட்டு ஒன்றிய அரசின் தர நிர்ணயத்துக்குட்பட்டு நெல் கொள்முதல் செய்து வருகிறது. கடந்த 2022-2023 காரீப் கொள்முதல் பருவத்தில் 21.08.2023 வரையில் 3526 எண்ணிக்கையிலான நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 5,20,503 விவசாயிகளிடமிருந்து 43,84,226 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு ரூ.9,414.58 கோடி விற்பனை தொகையாக வழங்கப்பட்டது.

இந்த ஆண்டும் காரீப் கொள்முதல் 2023-2024 பருவத்தில் தேவையான அளவு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய மாநில அரசு முடிவெடுத்துள்ளது.

இந்த ஆண்டு 12.06.2023 அன்று மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகளுக்குத் தேவையான அளவு விதைகள் மற்றும் உரங்கள் குறுவை தொகுப்பு திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகளின் நலன் கருதி தமிழக முதல்-அமைச்சர் காரீப் 2023-2024 பருவத்துக்கான நெல் கொள்முதலினை 01.09.2023 முதற்கொண்டு மேற்கொள்ள மத்திய அரசை கேட்டுக்கொண்டதற்கிணங்க ஒன்றிய அரசு தமிழகத்தில் காரீப் 2023-2024 பருவத்துக்கான நெல் கொள்முதலினை 01.09.2023 முதற்கொண்டு மேற்கொள்ள ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அரசு காரீப் 2023-2024 பருவத்துக்கு குறைந்தபட்ச ஆதாரவிலையாக சாதாரண ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,183 என்றும், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,203 என்றும் நிர்ணயித்துள்ளது.

இந்நிலையில், நெல் உற்பத்தியினைப் பெருக்கும் வகையிலும், விவசாயிகளின் துயர்துடைத்து அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் நோக்கோடும், கேஎம்எஸ் 2023-2024 கொள்முதல் பருவத்துக்கு சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.82-ம், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.107-ம் கூடுதல் ஊக்கத் தொகையாக தமிழக அரசின் நிதியிலிருந்து வழங்க ஆணை பிறப்பித்து அதன்படியே, தற்போது சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,265 என்றும், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,310 என்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்கும் விவசாயிகளுக்கு வழங்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. மேலும், இந்த புதிய குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் மாநில அரசின் ஊக்கத் தொகையினை 01.09.2023 முதல் வழங்கவும் முதல்-அமைச்சர் ஆணையிட்டுள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours