ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் கதறிய ரசிகர்கள்!

Spread the love

ற்று நடந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் ஏற்பாடுகள் சரிவர செய்யாத காரணத்தினால் வெகுதொலைவில் இருந்து நிகழ்ச்சியைக் காண சென்றிருந்த ரசிகர்கள் கடும் சிரமத்திற்குள்ளானார்கள். பணம் செலுத்தி டிக்கெட் வாங்கியிருந்த ரசிகர்களையும் பவுன்சர்கள் வெளியேற்றியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்த நிலையில், திடீர் மழை காரணமாக நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சி நேற்று நடைப்பெற்றது. ஆனால், இசை நிகழ்ச்சியில் செய்யப்பட்ட முறையற்ற ஏற்பாடுகள் காரணமாக ரசிகர்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். இசை நிகழ்ச்சி நடைபெற்ற கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று மாலை முதலே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும் 15 ஆயிரம் பணம் செலுத்தி டிக்கெட் வாங்கியவர்களைக் கூட நிகழ்ச்சிக்கு உள்ளே செல்ல அனுமதிக்காமல் பவுன்சர்கள் விரட்டியதால் ரசிகர்கள் அவர்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிகழ்ச்சிக்காக பல கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து பல மணி நேரம் பயணித்து வந்திருந்த பலரும் இது போன்று வெளியே நிற்க வைக்கப்பட்டதால் எங்கள் பணத்தை திருப்பித் தர வேண்டும் என்றும், இது போன்ற மோசமான ஏற்பாட்டை எந்த இசை நிகழ்ச்சியிலும் பார்த்ததில்லை என்றும் தங்களது கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இயக்குநர் மணிரத்னம், ஷாலினி அஜித்குமார் போன்ற பிரபலங்கள் உள்ளே இருக்க, பத்தாயிரம் ரூபாய், பதினைந்தாயிரம் ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கியிருந்த ரசிகர்கள் எல்லாம் விரட்டியடிக்கப்பட்டார்கள். ஷாலினி, மணிரத்னத்திற்கான இசை நிகழ்ச்சி என்றால் எங்களிடம் ஏன் பணம் வாங்க வேண்டும் என்று நிகழ்ச்சி அரங்கின் வெளியே ரசிகர்கள் கதறிக் கொண்டிருந்தது மேலும் சர்ச்சையைக் கிளப்பியது.

இன்னொரு பக்கம், ‘3 மணிக்கு கேட் ஓப்பன் ஆகும் என சொன்னார்கள். நாங்கள் இரண்டு மணிக்கே சென்று விட்டோம். சொன்னது போலவே இசை நிகழ்ச்சி 7 மணிக்குத் தொடங்கி விட்டது. ஆனால், சில பேர் 8.30 மணிக்கு எல்லாம் வந்தார்கள். நிச்சயம் ஈ.சி.ஆர். டிராபிக் காரணமாக இருக்கும். ஆனால், முன் கூட்டியே திட்டமிட்டு வந்திருந்தால் இதை தவிர்த்திருக்கலாம். பெரிய ஓப்பன் ஸ்டேஜில் யார் தான் என்ன செய்ய முடியும்?’ என்றும் ரஹ்மானுக்கு ஆதரவாகவும் சிலர் ட்வீட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏசிடிசி நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் இதற்கு முழு பொறுப்பேற்று மன்னிப்புக் கோரியுள்ளது.

அந்த பதிவில், ‘சென்னை மக்களுக்கும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். இந்த அபாரமான வரவேற்பும், கட்டுக்கடங்காத கூட்டமும் எங்கள் நிகழ்ச்சியை பெரும் வெற்றியடையச் செய்துள்ளன. நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாதவர்களிடம் நாங்கள் மனதார மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம். இதற்கான முழு பொறுப்பையும் நாங்களே ஏற்கிறோம். நாங்கள் உங்களோடு இருக்கிறோம்’ எனக் கூறியுள்ளனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours