அமலாக்கத்துறையை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை !

Spread the love

தமிழகத்தில் நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 8 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அதன்படி, சென்னை, நுங்கப்பாக்கம், அண்ணாநகர் உள்ளிட்ட 8 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். செந்தில் பாலாஜி மற்றும் அவரது உறவினருடன் தொழில் முறையில் தொடர்புடையோரின் இடங்களில் சோதனை நடைபெற்றது.

சட்டவிரோத சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக வந்த புகாரின் அடிப்படையில் கரூர், திருச்சி, தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம், தி.மலை, புதுக்கோட்டை, கடலூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் சோதனை நடத்தப்பட்டது. புதுக்கோட்டையில் தொழிலதிபர் சாலை ஒப்பந்ததாரர் ராமச்சந்திரன் என்பவருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்றது. இதுபோன்று திண்டுக்கல்லில் பிரபல தொழிலதிபர் ரத்தினம் வீடு, அலுவலகம், அவரது மைத்துனர் வீடுகள் மற்றும் தொழிலதிபர் கோவிந்தன் என்பவர் வீட்டிலும் சோதனையில் ஈடுபட்டனர்.

மணல்குவாரி, பெட்ரோல் பங்க், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களை செய்து வரும் நிலையில், சோதனை நடப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில், இன்று தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, அதிமுக முன்னாள் எம்எல்ஏ தி.நகர் சத்யா தொடர்புடைய 18 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை, கோவை, திருவள்ளூர் பகுதிகளில் உள்ள வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்துகிறது. வருமானத்திற்கு அதிகமாக ரூ.2.64 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். சொத்து குவிப்பு வழக்கில் 2 மாதங்களில் விசாரணையை முடிக்க நீதிமன்றம் உத்தரவிட நிலையில், சோதனை நடைபெறுகிறது. இதுபோன்று, சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள அதிமுக நிர்வாகி ஆர்எஸ் ராஜேஷ் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

வட சென்னை வடகிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஆர்எஸ் ராஜேஷ் வீட்டில் 10 பேர் கொண்ட அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். அதிமுக முன்னாள் எம்எல்ஏ தி.நகர் சத்யாவின் நண்பர் ஆர்எஸ் ராஜேஷ் நுகர்வோர் கூட்டுறவு சங்க இணை தலைவராக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், தமிழ்நாடு – ஆந்திரா எல்லையான ஆரம்பாக்கம் பகுதியில் உள்ள சத்யாவின் நண்பர் திலீப்குமார் அலுவலகத்திலும் சோதனை நடைபெறுகிறது.

மேலும், திண்டுக்கல் ஊரக வளர்ச்சித்துறை உதவி செயற்பொறியாளர் மெகத்ஷாஜகான் வீட்டிலும், தேனி அல்லிநகரம் பகுதியில் உள்ள மெகத்ஷாஜகான் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக நிர்வாகிகள் வீடு, அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, நேற்று அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில், இன்று லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours